பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை! மகுடம் சூட போவது யார்?

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இந்த தொடரில் தோல்வி பக்கமே செல்லாத ஒரே அணியாகும். லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றிகளை வாரி குவித்த இந்திய அணி அரைஇறுதியில் இங்கிலாந்தை சந்திக்க இருந்தது. அந்த ஆட்டம் மழையால் ரத்தானதால் லீக் சுற்றில் முதலிடம் பிடித்த வகையில் இந்திய அணி முதல் முறையாக இறுதிசுற்றை எட்டியது.

தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதால், இந்திய வீராங்கனைகள் மனதளவில் வலுவாக இருப்பார்கள். இந்தியாவின் ஒரே நம்பிக்கை 16 வயதான ஷபாலி வர்மா தான்.

‘இளங்கன்று’ பயமறியாது என்பது போல் எல்லா பந்து வீச்சையும் அடித்து துவம்சம் செய்துள்ளார். 9 சிக்சருடன் மொத்தம் 161 ரன்கள் (29, 39, 46, 47 ரன்) சேர்த்துள்ள ஷபாலியின் அதிரடியைத் தான் இந்தியா அதிகமாக சார்ந்து இருக்கிறது. மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா ஓரளவு நல்ல நிலையில் உள்ளார். ஆனால் மிடில் வரிசையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் (4 ஆட்டத்தில் 26 ரன்) தடுமாற்றம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவரும் ஜொலித்தால் பேட்டிங் வரிசை மேலும் பலப்படும். இன்று ஹர்மன்பிரீத் கவுருக்கு பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் இந்திய அணி ஒரு ஆட்டத்தில் கூட 150 ரன்களை தொடவில்லை. ஆனால் கட்டுக்கோப்பான பந்து வீச்சு வெற்றியை தேடித்தந்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் (9 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே (7 விக்கெட்), ராதா யாதவ் (5 விக்கெட்) மிரட்டக்கூடியவர்கள்.

அரைஇறுதி கைவிடப்பட்டதால் இந்திய வீராங்கனைகள் 8 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டியதாகி விட்டது. ஆனாலும் வெளியில் அதிகம் சுற்றாமல் இறுதிப்போட்டியை தாரகமந்திரமாக கொண்டு உள்விளையாட்டு அரங்கில் பயிற்சியில் ஈடுபட்டனர். இதனால் உத்வேகம் தளராமல் தங்களை தயார்படுத்தி உள்ளனர். முதல்முறையாக கோப்பையை வசப்படுத்தி புதிய சரித்திரம் படைக்கும் முனைப்புடன் இந்திய வீராங்கனைகள் வியூகங்களை தீட்டியுள்ளனர்.

‘நம்பர் ஒன்’ அணியான ஆஸ்திரேலியா 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் வந்துள்ளது. ஏற்கனவே 4 முறை பட்டத்தை கைப்பற்றி இருக்கும் ஆஸ்திரேலியா அந்த எண்ணிக்கையை 5 ஆக உயர்த்துவதற்கு வரிந்து கட்டுகிறது. சொந்த மண்ணில் ஆடுவதும், ஏற்கனவே பல இறுதி ஆட்டத்தில் விளையாடி நெருக்கடியை சமாளித்த அனுபவமும் அவர்களுக்கு கூடுதல் அனுகூலமாகும்.

தொடக்க ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவின் சுழல் வலையில் (4 விக்கெட் எடுத்தார்) தான் ஆஸ்திரேலியா பணிந்தது. அவரை தவிர்த்து மேலும் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் அங்கம் வகிக்கிறார்கள். எனவே சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்வது குறித்து ஆஸ்திரேலிய வீராங்கனைகள் நேற்று சுழல் வீராங்கனைகள் மூலம் விசேஷ பயிற்சி மேற்கொண்டனர்.

பேட்டிங்கில் கேப்டன் மெக் லானிங் (116 ரன்), பெத் மூனி (2 அரைசதத்துடன் 181 ரன்), விக்கெட் கீப்பர் அலிசா ஹீலி (2 அரைசதத்துடன் 161 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் மேகன் ஷூட் (9 விக்கெட்), ஜெஸ் ஜோனஸ்செனும் அந்த அணியில் கவனிக்கத் தக்கவர்களாக உள்ளனர்.

மொத்தத்தில் இரு அணி வீராங்கனைகளும் நீயா-நானா? என்று மல்லுகட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. முதலில் பேட்டிங் செய்யும் போது 150 ரன்களுக்கு மேல் எடுத்தாலே வெற்றிக்குரிய அறிகுறி உருவாகி விடும்.

இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே 75 ஆயிரத்திற்கு மேல் விற்று விட்டன. இன்னும் ரூ.245, ரூ.490, ரூ.735 விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. எனவே ரசிகர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 1999-ம் ஆண்டு பெண்கள் கால்பந்து உலக கோப்பை இறுதி ஆட்டத்தை 90 ஆயிரத்து 185 பேர் நேரில் கண்டு களித்தனர்.

அதுவே பெண்கள் போட்டியை பார்த்த அதிகபட்ச ரசிகர்கள் எண்ணிக்கையாகும். அந்த சாதனை எண்ணிக்கை இன்றைய மகளிர் தினத்தன்று முறியடிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கோப்பையை உச்சிமுகரும் அணிக்கு ரூ.7 கோடியே 40 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.3 கோடியே 70 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். மெல்போர்னில் இன்று மழை ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, தானியா பாட்டியா, ஷிகா பாண்டே, ராதா யாதவ், பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட்.

ஆஸ்திரேலியா: பெத் மூனி, அலிசா ஹீலி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லி கார்ட்னெர், ராச்சல் ஹெய்ன்ஸ், ஜெஸ் ஜோனஸ்சென், நிகோலா கேரி, டெலிசா கிம்மின்ஸ், வார்ஹாம் அல்லது மோலி ஸ்டிரானோ, சோபி மோலினெக்ஸ், மேகன் ஷூட்.

இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

உற்சாகமாக விளையாட வேண்டும் - இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்

“முதல்முறையாக 90 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடப்போவது மிகச்சிறந்த உணர்வை தருகிறது. நாங்கள் அனுபவித்து உற்சாகமாக விளையாட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இது எங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய தருணம்.

லீக் சுற்றில் நாங்கள் நன்றாக ஆடினோம். அதே சமயம் இது புதிய நாள், புதிய தொடக்கம், எல்லாமே முதல் பந்தில் இருந்து தொடங்குகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இரண்டு அணிகளுக்கும் நெருக்கடி உள்ளன. இரு அணிகளுமே கோப்பையை வெல்ல தகுதியானவை”

கனவு நனவாகிறது - ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங்

“மெல்போர்ன் மைதானத்தில் போட்டிகளை பார்க்கும் போது நாமும் ‘மெகா’ ரசிகர்கள் கூட்டத்திற்கு முன் விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன். அத்தகைய போட்டியில் பங்கெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வாழ்க்கையில் மிகச்சிறந்த தருணமாக இது இருக்கும். நாங்கள் இங்கு ‘ஷோ’ காட்ட வரவில்லை. வெற்றி பெறுவதற்காக வந்துள்ளோம். அந்த மனப்பான்மையுடன் களம் இறங்குவோம். எங்களது மிகச்சிறந்த ஆட்டம் இன்னும் வெளியாகவில்லை. நாளைய தினம்(இன்று) அது நடக்கும் என்று நம்புகிறேன்.”

பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய பெண்கள் அணி வெற்றி பெற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதலை விட பெரிய இறுதிப்போட்டி இருக்க முடியாது. இரு அணிகளுக்கும் வாழ்த்துகள். மகளிர் தின வாழ்த்துகள். சிறந்த அணி வெற்றி பெறும். மெல்போர்னில் நாளைய தினம் நீலநிறத்துக்குரியதாக (இந்திய அணியின் சீருடை) அமையும்’ என்று குறிப்பிட்டார்.

முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஹாய் மோடி....பெண்கள் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- இந்தியா நாளை (இன்று) மோதப்போகிறது. திரளான ரசிகர்களின் முன்னிலையில் ஆடப்போகிறார்கள். இது சூப்பர் ஆட்டமாக இருக்கப்போகிறது. ஆஸ்திரேலியா வெல்லப்போகிறது’ என்றார்.

Post a Comment

0 Comments