நாடாளுமன்ற தேர்தல்களில் வேட்பாளர்களின் குற்றவழக்கு விவரங்களை வெளியிடசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் வேட்பாளர்களின் குற்றவழக்கு விவரங்களை வெளியிட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தேர்தல் கமிஷன் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி 13-ந்தேதி பிறப்பித்த உத்தரவின்படியும், தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்துள்ளபடியும், நடைபெறும் அனைத்து நாடாளுமன்ற, மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் அரசியல் கட்சிகள் ஒவ்வொரு உத்தரவுகளையும் பின்பற்ற வேண்டும்.

வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொருவரின் தனிப்பட்ட குற்ற வழக்கு விவரங்களையும், அவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான காரணத்தையும், குற்றவழக்கு இல்லாத மற்றவர்களை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை? ஆகிய விவரங்களை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும்.


இந்த விவரங்களை சி-7 விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், அரசியல் கட்சியின் வலைத்தள பக்கத்திலும் வெளியிட வேண்டும். வேட்பாளரை தேர்வு செய்த 48 மணி நேரத்திற்குள்ளோ அல்லது முதல்கட்ட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதிக்கு 2 வாரங்களுக்கு முன்னதாகவோ, இதில் எது முன்னதாக வருகிறதோ அதற்குள் இந்த விவரங்களை வெளியிட வேண்டும்.

வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 72 மணி நேரத்துக்குள் சி-8 விண்ணப்பத்தில் கூறியுள்ளபடி இந்த உத்தரவுகளை செயல்படுத்தியதற்கான உடன்பாடு அறிக்கையையும் அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப வேண்டும்.


இந்த உத்தரவுகளை நிறைவேற்ற தவறினால் அந்த கட்சி சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அதோடு, அந்த கட்சிகள் தேர்தல் கமிஷனின் விதிகளின்படி சட்டரீதியான உத்தரவுகளை கடைபிடிக்க தவறியதாகவும் கருதப்படும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments