நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் மீண்டும் உச்ச நீதி மன்றத்தில் மனு!

டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டும், பின்னர் சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன.

மரண தண்டனையை எதிர்நோக்கி திகார் சிறையில் இருக்கும் 4 பேரும் ஒவ்வொருவராக மறுஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை மாறி மாறி தாக்கல் செய்ததால் அவர்களை தூக்கில் போடுவது இதுவரை 3 முறை தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

இந்த குற்றவாளிகளில் ஏற்கனவே முகேஷ் குமார் சிங், வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் ஆகிய மூவரின் கருணை மனுக்கள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளியான பவன் குமார் குப்தா தரப்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவும் சமீபத்தில் நிராகரிக்கப்பட்டது. இத்துடன் குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டன.

இதன் மூலம் அவர்களுக்கு இருந்த அனைத்து சட்ட உரிமைகளும் முடிவடைந் தன. இதனை தொடர்ந்து டெல்லி சிறைத்துறை தரப்பில் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கான புதிய தேதியை அறிவிக்க கோரிக்கை விடுத்து டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி தர்மேந்தர் ராணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் விசாரணை தொடங்கியதும் குற்றவாளிகள் அக்‌ஷய் குமார், பவன் குமார் குப்தா, முகேஷ் குமார் சிங், வினய் குமார் சர்மா ஆகிய நால்வரையும் வருகிற 20-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு சாகும் வரை தூக்கில் போட வேண்டும் என நீதிபதி தர்மேந்தர் ராணா மரண வாரண்டு பிறப்பித்தார்.

இந்தநிலையில் நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,  தனது தூக்கு தண்டனைக்கு எதிராக புதிய மறுசீராய்வு மனு, கருணை மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் என முகேஷ் சிங் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

சட்ட, அரசியல் சாசன வாய்ப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்ட நிலையில் மீண்டும் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளைக்கே விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நிர்பயா வழக்கில் மரண வாரண்டு  4-வது முறையாக பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.  ஏற்கனவே கடந்த ஜனவரி 22, பிப்ரவரி 1 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் அவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு மரண வாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்ததும், மூன்று முறையும் பல்வேறு சட்டரீதியான காரணங்களால் அவர்களை தூக்கில் போடுவது ஒத்திவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments