மாநிலங்களவை தேர்தலில்12-13 இடங்கள் கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 55 பேரின் பதவி காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.

காலியாகவுள்ள 55 இடங்களுக்கு வரும் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் போட்டியிட வரும் 6 ஆம் தேதியில் இருந்து வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம்.  

13 ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.  மக்களவையில் 303 உறுப்பினர்களை கொண்டு தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ள போதிலும், மாநிலங்களவையில் அக்கட்சிக்குப் பெரும்பான்மை இல்லை. இதனால், முக்கிய மசோதாக்கள்  நிறைவேற கூட்டணி கட்சிகளை நம்பி அந்தக் கட்சி உள்ளது.


இந்த நிலையில், வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ள  மாநிலங்களவை தேர்தலில் தங்கள் கட்சிக்கு 12-13 இடங்கள் கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது.  

இதன் மூலம், மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 94-95 ஆக உயரும்.  வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அடுத்த சுற்று தேர்தலில், பாஜகவின் பலம் மேலும் அதிகரிக்கும். ஏனெனில் உத்தர பிரதேசத்தில்  அக்கட்சிக்கு அதிக எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.  இருந்த போதிலும், பாஜகவால் மாநிலங்களவையில் தனிப்பெரும்பான்மை பெறுவது கடினமான ஒன்றாக பார்க்க தோன்றுகிறது. 

வரும் மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் பிற பிராந்திய கட்சிகளை பொருத்தவரை திமுக, அதிமுக தலா 3 இடங்களை கைப்பற்ற உள்ளது. ஜேடியூ, பிஜேடி மற்றும் ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் 5 இடங்களையும்,  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 4 மற்றும் டி.ஆர்.எஸ் 1 இடத்தையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மராட்டியம் (7) ,ஒடிசா (4) தமிழ்நாடு (6), மேற்கு வங்காளம் (5) ஆந்திர பிரதேசம் (4) தெலுங்கானா (2), பீகார் (5), சத்தீஷ்கர் (2), குஜராத் (4), அரியானா (2) இமாச்சல பிரதேசம் (1), ஜார்க்கண்ட் (2), மத்திய பிரதேசம் (3), மணிப்பூர் (1), ராஜஸ்தான் (3), மேகலாயா (1) என மொத்தம் 55 இடங்களுக்கு வரும் 26 ஆம் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது. 

Post a Comment

0 Comments