மொபைலில் ஒலிக்கும் கொரோனா குரல்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச அளவில் 3600 பேர் பலியாகியுள்ளனர். சைனாவிலிருந்து உலகின் பல நாடுகளுக்கு பரவிய கொரோனா தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி 40-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கொடூர வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மக்களுக்கு தொலைபேசி சேவை வழங்கி வரும் நிறுவனங்கள் மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் படி கொரோனா விழிப்புணர்வுக்காக பிரத்யேக காலர் டியூனை வழங்கி வருகிறது. இருமலுடன் ஆரம்பிக்கும் அந்தக் காலர் டியூனில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தக் காலர் டியூன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் மாதவன்,  “இப்போதெல்லாம் நான் யாருக்கு போன் செய்தாலும், கேட்கும் முதல் இருமல் சத்தம் என்னை மிரள வைக்கிறது. அது மத்திய சுகாதாரத்துறையின் விழிப்புணர்வு பிரசாரம் என்பது பின்னர் தான் தெரிய வருகிறது. 

சிறந்த பணி. சிறந்த விழிப்புணர்வு. ஆனால் அந்த இருமலை மட்டும் நீக்கி விடுங்களேன். நான் போன் செய்யும் ஒவ்வொரு நபரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதையே விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments