இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 155க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

கேரளா மாநிலத்தில்தான் முதன்முதலில் இந்த பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் கொரோனா தாக்குதல் ஏற்பட்டது.

மராட்டியம், கேரளா, அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, காஷ்மீர், லடாக், தமிழ்நாடு, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 15 மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

கொரோனா வைரசுக்கு இந்தியாவில்  2 பேர் பலியாகி இருந்தனர். கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவரும், டெல்லியைச் சேர்ந்த 69 வயது மூதாட்டியும் உயிரிழந்து இருந்தனர்.

தற்போது மராட்டியத்தில் 64 வயது முதியவர் ஒருவரும் பலியாகி உள்ளார்.மும்பை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.  இதை தொடர்ந்து  இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது. 

இது குறித்து சுகாதாராதுறை சார்பில்   விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினசரி உயர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மராட்டியத்தில் அதிகபட்சமாக 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 27 பேருக்கும், அரியானாவில் 14 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 13 பேருக்கும், தெலுங்கானாவில் 3 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.

Post a Comment

0 Comments