இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரம்! ஜாக்கிரதை மக்களே!


இந்தியாவில் மூவருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இந்தியாவில் டெல்லி மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்


இருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது ராஜஸ்தானின் ஜெய்பூரில் ஒருவருக்கு கொரானோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 80 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தெலங்கானாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

வியன்னாவில் இருந்து டெல்லிக்கு கடந்த பிப்ரவரி 25-ம் தேதியன்று வந்த ஏர் இந்தியா விமானத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும், யாருடனும் தொடர்பு கொள்ள வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.


டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர், இந்த விமானத்தில் வந்தவர் தான் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதனிடையே, பாதிக்கப்பட்ட டெல்லி நபரோடு தொடர்பில் இருந்த ஆக்ராவைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

அவர்கள் 6 பேரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக டெல்லி நொய்டாவில் 2 பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

அதேநேரத்தில் இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 112 பேரில் எவருக்கும் கொரோனா தாக்கம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஹயாத் விடுதியில் தங்கியிருந்த ஒருவருக்கு கொரோனா தாக்கம் உறுதியான நிலையில், விடுதியில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, வைரஸ் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்


மத்திய அமைச்சகங்களும், மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர் தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

எனவே கொரோனா தாக்கம் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட கால இடைவெளியில் கைகளைக் கழுவ வேண்டும் என்றும்,  கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும்,  கண்கள், மூக்கு, வாய் ஆகியவற்றை தொடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

முகக் கவசம் அணிய முயற்சிக்க வேண்டும் என்றும் காய்ச்சல், இருமல் போன்றவை ஏற்பட்டால் தாமதிக்கமால் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறத்தியுள்ளார்

Post a Comment

0 Comments