ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்படுமா?? பிசிசிஐ தரப்பு பதில்!

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்படுமா என்பதற்கு பிசிசிஐ தரப்பு பதில் அளித்துள்ளது. 

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸால், உலகம் முழுவதும் இதுவரை 3,637 போ் உயிரிழந்துவிட்டனா். சுமாா் 1,07,350 போ் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தியாவைப் பொறுத்தவரை, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை நாற்பதைத் தாண்டியுள்ளது. கரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்வதற்காக, 52 ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 6-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மொத்தம் 4,058 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக, புணேயில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இத்தாலியில் விளையாட்டு மைதானங்களுக்கு ரசிகா்கள் ஏப்ரல் மாதம் வரை வருவதை தவிா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஐபிஎல் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் 20 ஓவா் உள்ளூா் கிரிக்கெட் போட்டியாகும். சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்பட 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. 

வெளிநாடுகளைச் சோ்ந்த கிரிக்கெட் வீரா்களும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளனா். வரும் 29-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ளது. மும்பையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை ஆகிய அணிகள் மோதவுள்ளன. 

இந்நிலையில் கரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்படுமா என்கிற கேள்விக்கு பிசிசிஐ தரப்பில் பதில் தெரிவித்துள்ளதாவது:

நிலைமையைக் கண்காணித்து வருகிறோம்.  எல்லா முன்னேற்பாடுகளிலும் கவனம் செலுத்துவோம். எந்தக் குறையும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். ஐபிஎல் தொடங்க இன்னமும் பல நாள்கள் உள்ளன. எனவே யாரும் பதற்றப்பட வேண்டாம். 

ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்படுவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு மைதானத்திலும் மருத்துவக்குழு செயல்படும். எல்லாப் பார்வையாளர்களும் பரிசோதிக்கப்படுவார்கள் என்றார். 

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் செய்தியாளா்களைக் கடந்த வெள்ளிக்கிழமை பிசிசிஐ தலைவா் செளரவ் கங்குலி சந்தித்து கூறியதாவது: ஐபிஎல் இம்மாதம் 29-ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி தொடங்கும். அனைத்து நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு வரவுள்ளது. இதனால் ஒரு பிரச்னையும் எழவில்லை. உலகம் முழுவதும் ஒரு நாட்டு அணி இன்னொரு நாட்டுக்குச் சென்று விளையாடி வருகிறது. அவரிடம், ஐபிஎல் போட்டியில் கரோனா வைரஸால் விளையாட்டு வீரா்களும், ரசிகா்களும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 

எந்த மாதிரியான நடவடிக்கைகள் என்று கேட்டால் அதை சரியாக இப்போது கூற முடியவில்லை. மருத்துவக் குழுதான் அதை எங்களிடம் தெரிவிக்கும். அதன்படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றாா் கங்குலி. 

Post a Comment

0 Comments