கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் முயற்சியில் அமெரிக்கா!!

சீனாவில் உருவாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது. உலக அளவில், 1,58,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பலியானோர் எண்ணிக்கை 6,500-ஐ தாண்டியது. அமெரிக்காவில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள 49- மாகாணங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கொரோனா வைரசை எதிர்கொள்ள பல்வேறு  முயற்சிகளில் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்காவும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இதன்படி, கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்கா இன்று தொடங்கியுள்ளது. 

வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி மையத்தில் பரிசோதனை நடைபெற்று வருகிறது. 43 வயதான ஜெனிபர் ஹெலர் என்ற பெண்ணிடம் தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கட்டங்களில் இந்த பரிசோதனை முடிவுகளில், தடுப்பூசி பாதுகாப்பானது என்று தெரிய வந்த பிறகு, நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கு சுமார் 18 மாத காலம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. ஆரோக்கியமான உடல் நலம் கொண்ட 45 பேரிடம் இந்த தடுப்பூசி மருந்து சோதனை செய்யப்படுகிறது. 

இது தொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர்  டிரம்ப், இது, மருத்துவ துறை வரலாற்றிலேயே அதிவிரைவான மருந்து தயாரிப்பு என பெருமிதம் தெரிவித்தார். மேலும், கொரோனா தடுப்பு சிகிச்சை முறைகள் மற்றும் அது தொடர்பான இதர சிகிச்சைகளை உருவாக்கும் முயற்சியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அதில், நம்பகமான சில முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், அமெரிக்க மக்கள் அனைவரும், கல்வி கற்பது முதல் அலுவல் பணி செய்வது வரை வீட்டில் இருந்தே செய்ய அறிவுறுத்தப்படுவதாக கூறிய டிரம்ப், உணகவங்களில் உண்பது மற்றும் தேவையற்ற பயணங்கள் ஆகியவற்றை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

mRNA-1273 என்று அழைக்கப்படும் தடுப்பு மருந்தை அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (NIH) விஞ்ஞானிகள் உயிரிதொழில்நுட்பவியல் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து தயார் செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments