டோனி மகிழ்ச்சி! ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்பு அளவற்றது!

என்னை தல என்று அழைக்கும்போது அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு பிரதிபலிக்கிறது என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் பங்கேற்காமல் இருந்து வருகிறார் இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனி.

வரும் 29-ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் டி 20 தொடரின் 13-வது சீசனுக்கு தயாராகும் விதமாக சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பயிற்சியை தொடங்கினார் 38 வயதான தோனி.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியுடனான தனது உறவு குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தோனி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அதில் தோனி கூறியதாவது, “ சிஎஸ்கே அணி என்னை எல்லாவற்றிலும் மேம்பட உதவியது. அது தனி மனிதனாக இருந்தாலும் சரி... கிரிக்கெட் வீரராக இருந்தாலும் சரி. சூழ்நிலைகளை கையாளுவது களத்திலும் சரி, வெளியிலும் சரி கடினமானதுதான். 


சிஎஸ்கே ரசிகர்கள் என்னை தல என்று அழைப்பதை சிறப்பாக உணர்கிறேன். தல என்றால் சகோதரன் என்று பொருள். அவர்கள் அவ்வாறு அழைக்கும்போது என் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு பிரதிபலிக்கிறது.

நான் சென்னையில் இருக்கும்போது சரி, தென் இந்தியாவில் இருக்கும்போது சரி அவர்கள் என் பெயரை சொல்லி அழைப்பதில்லை. தல என்றுதான் அழைக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments