முன்னாள் அமைச்சரே இவ்வாறு செய்தால் என்ன தான் செய்வார்கள் சாமினியர்கள்!

ராட்சத துளைகளிட்டு அசுரவேகத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறார்கள். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளின் விவசாயக் கிணறுகள் தொடங்கி ஆழ்துளைக்கிணறுகள் வரை வணிக நோக்கத்துக்காகவே தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. 24 மணி நேரமும் ஓய்வில்லாமல் இயங்குகின்றன தண்ணீர் லாரிகள்.

சூழலியல் விதிகளின்படி உலகின் நன்னீர் இருப்பு குறிப்பிட்ட சதவிகிதம்தான் இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட சதவிகித நன்னீரே பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப கூடுதலாகவோ குறைவாகவோ நமக்கு மழையாகக் கிடைக்கிறது. புதிதாக நன்னீர் உற்பத்தி என்ற ஒன்று இல்லை. ஆனால், இதெல்லாம் புரியாமல் நமது அரசியல் வாதிகள் தொடங்கி பன்னாட்டு நிறுவனங்கள் வரை தண்ணீர்த் தொழிலில் கோடிக்கணக்கில் கொழிக்கிறார்கள்.


இந்த நிலையில்தான், ‘பொதுப்பணித் துறை முன்னாள் அமைச்சரான துரைமுருகனின் மருமகளுக்குச் சொந்தமான மினரல் வாட்டர் ஆலையிலேயே அனுமதி பெறாமல் நிலத்தடிநீரை உறிஞ்சியுள்ளனர்’ என எழுந்துள்ள குற்றச்சாட்டு, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கேன் குடிநீர் ஆலைகள் தமிழகம் முழுவதும் புற்றீசலைப்போல் முளைத்துள்ளன. இந்த ஆலைகள் தினமும் பல கோடி லிட்டர் நிலத்தடிநீரை உறிஞ்சி விற்பனைக்கு அனுப்புகின்றன. குடிநீர் ஆலைகள் அமைப்பதற்கு பல்வேறு அரசுத் துறைகளின் அனுமதியைப் பெறுவதுடன், அவர்கள் கூறும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். பெரும்பாலான ஆலைகள் இந்த நடைமுறைகளையெல்லாம் பின்பற்றுவதே கிடையாது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘அனுமதியில்லாத குடிநீர் ஆலைகளை, மார்ச் 2-ம் தேதி மாலைக்குள் மூட வேண்டும். மார்ச் 3-ம் தேதிக்குள் அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், மாவட்ட கலெக்டர்களுக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும்’ என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் 682 குடிநீர் ஆலைகளுக்கு சீல்வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நிலத்தடிநீர் எடுப்பதற்கான உரிமத்தை எளிய முறையில் பெறுவதற்கான வழிமுறைகளை அரசு விரைவில் உருவாக்க வலியுறுத்தி, கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.

சீல் வைக்கப்பட்ட ஆலை


‘சீல் வைக்கப்பட்ட ஆலைகளில் மின்சார இணைப்பைத் துண்டித்துள்ளோம். உரிமம் புதுப்பிக்க 116 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதைப் பரிசீலனை செய்யும்போது, ஆலையில் தண்ணீர் அளவிடும் கருவி பொருத்தப்பட்டுள்ளதா, மழைநீர் சேகரிப்பு வசதி உள்ளதா என ஆய்வுசெய்து, 6,000 ரூபாய் கட்டணம் பெறுகிறோம்’ என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது தமிழக அரசு. இதை தொடர்ந்து, ‘‘சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் ஆலைகளை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும். 

இயற்கை வளம்

இயற்கை வளங்களைச் சுரண்ட யாருக்கும் அனுமதியில்லை. பல்வேறுவிதமான ஆலைகள் கடந்த காலங்களில் செய்த தவறுக்கு உரிய விலையைக் கொடுக்க வேண்டாமா? அவர்கள் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும். குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டம் செய்து நீதிமன்றத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்த நினைப்பது தவறு. நிலத்தடிநீர், அரசின் சொத்து. முறையாக உரிமம் பெற்று செயல்படும் ஆலைகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.


சீல் வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகளில் பல ஆலைகள், அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கும் சொந்த மானவை என்பது தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக, காட்பாடியை அடுத்துள்ள கசம் பகுதியில் சீல் வைக்கப்பட்ட ‘அருவி’ குடிநீர் ஆலை, தி.மு.க பொருளாளர் துரைமுருகனுக்குச் சொந்தமானது என்பதுதான் கடும் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த ஆலை, துரைமுருகனின் மருமகளும் வேலூர் எம்.பி-யான கதிர் ஆனந்தின் மனைவியுமான சங்கீதா பெயரில் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

நிலத்தடிநீரை எடுக்கக் கூடாது

‘‘நிலத்தடிநீரை எடுக்கக் கூடாது என்று விதி இருக்கும் இடத்தில்தான் ‘அருவி’ குடிநீர் ஆலை அமைந்திருக்கிறது. எனவே, சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்த ஆலையில் உள்ள போர்வெல்களுக்கு சீல் வைத்துள்ளோம்’’ என்கின்றனர் பொதுப்பணித் துறை அதிகாரிகள்.

துரைமுருகன்

‘‘துரைமுருகன், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர். தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர். நீர் மேலாண்மை, நிலத்தடிநீர் மேம்பாடு குறித்த புள்ளிவிவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் துரைமுருகனே தனது சொந்த மண்ணை வறண்ட பூமியாக மாற்றுவதற்கான விதையைத் தூவலாமா?’’ என்று கடுகடுக்கின்றனர் விவசாயிகள்.

இதுகுறித்துப் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், ‘‘கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க, ஜோலார்பேட்டை யிலிருந்து ரயில் மூலம் காவிரி உபரிநீர் சென்னைக்கு அனுப்பப்பட்டது. அந்த நேரத்தில், ‘ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் எடுத்துச் சென்றால் மாவட்டம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்’ என்று துரைமுருகன் பேசினார். அதற்கு பெரியளவில் எதிர்ப்பு கிளம்பவே, ‘நான் அப்படியெல்லாம் பேசவில்லை’ என்று மறுப்பு அறிக்கைவிட்டார் துரைமுருகன். இங்கே விதி மீறி தண்ணீர் உறிஞ்சுவதற்காகத்தான், சென்னைக்கு தண்ணீர் அனுப்பினால் போராட்டம் வெடிக்கும் என்று துரைமுருகன் அப்போது சொன்னாரா?

‘எட்டு ஆண்டுகளில், இந்த அரசு தண்ணீருக்காக எந்தப் புதிய திட்டத்தையும் செயல்படுத்தவில்லை’ என்று பல மேடைகளில் அ.தி.மு.க அரசுக்கு எதிராகப் பேசுகிறார் துரைமுருகன். இப்போது இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்துள்ள அவருக்கு, எந்த இடத்தில் குடிநீர் ஆலையைத் தொடங்க வேண்டும், அதற்கான வழிமுறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்கிற அடிப்படை விஷயங்கள்கூடவா தெரிந்திருக்காது. எல்லாமே நாடகம்’’ என்கின்றனர் கொந்தளிப்புடன்.

தமிழக அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநிலப் பொதுச்செயலாளர் பாலாறு வெங்கடேசன், ‘‘துரைமுருகன் வாட்டர் கம்பெனி நடத்திவருவது எல்லோருக்குமே தெரியும். ஆனால், அனுமதி பெறாமல்தான் அந்த கம்பெனியை நடத்திவந்தார் என்பதுதான் எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. முன்னாள் அமைச்சரே இப்படிச் செய்தால் மற்றவர்கள் எப்படித் திருந்துவார்கள்? இன்னொரு பக்கம், இத்தனை நாள்களாக அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்கள் என்றும் கேள்வி எழுகிறது. அனுமதியில்லாமல் இயங்கிவந்த துரைமுருகனின் ஆலைக்கு சீல் வைத்தது வரவேற்கத்தக்கது.

குடிநீர் ஆலை

குடிநீர் ஆலை தொடங்க வேண்டுமென்றால் ஏராளமான விதிகள் இருக்கின்றன. விண்ணப்பிக்கும் நபருக்கு நிலம் சொந்தமாக இருக்க வேண்டும். அந்த இடத்தில் உபரிநீர் இருந்தால் மட்டுமே வணிகத்துக்கு அனுமதி வழங்கப்படும். விற்பனைக்கு வரும் குடிநீர் பாதுகாப்பானதுதானா என, உணவு பாதுகாப்புத் துறை ஆய்வுக்கு உட்படுத்தும். அதற்கடுத்து ஐ.எஸ்.ஐ சான்று வாங்க வேண்டும். 

இவ்வளவுக்குப் பிறகு, தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் இயந்திரங்களையும் அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்துவார்கள். இந்த நடைமுறைகளை, பெரும்பாலான குடிநீர் ஆலைகள் பின்பற்றுவ தில்லை. பணம் கொடுத்து அனுமதி வாங்கிக்கொள்கின்றனர். தண்ணீர் திருட்டை அப்படியே விட்டுவிடாமல், இந்தப் பிரச்னைக்கு அரசு நிரந்தரமாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்றார்.

துரைமுருகனின் மகன்

இதுதொடர்பாக விளக்கம் கேட்க துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திடம் பேசினோம். ‘‘அனைத்து குடிநீர் ஆலைகளுக்கும் சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைப் பின்பற்றியே எங்களுடைய ஆலை மீதும் நடவடிக்கை எடுத்துள்ளனர். நாங்கள் 2003-ம் ஆண்டு அனுமதி பெற்றுள்ளோம். இப்போதுள்ள அதிகாரிகளுக்கு அது தெரியுமா, தெரியாதா என எனக்குத் தெரியவில்லை. அனுமதி பெற்றதற்கான விளக்கத்தை எழுதி, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பவுள்ளோம்’’ என்றார்.

பல குடிநீர் ஆலைகளுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டிருந்தாலும் பல மாவட்டங்களில் அ.தி.மு.க பிரமுகர்களின் பினாமி பெயரில் இயங்கிவரும் குடிநீர் ஆலைகள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. அதுகுறித்து ‘ஜூ.வி நிருபர்கள் விசாரணையில் இறங்கியபோது, ‘‘உரிமத்துக்கு விண்ணப்பித்துள்ளதால் ‘சீல்’ வைக்கவில்லை’’ என்ற ஒற்றை வரி பதிலுடன் அதிகாரிகள் கடந்து செல்கிறார்கள்.

குடிநீர்ப் பஞ்சம்

குடிநீர்ப் பஞ்சத்தால், தமிழகத்துக்குப் பேராபத்து காத்திருப்பதை உயர் நீதிமன்றம் தன் உத்தரவு மூலம் உணர்த்தியுள்ளது. இதற்கு நிரந்தரமான தீர்வுகாண என்ன செய்யப்போகிறது தமிழக அரசு.

மினரல் வாட்டர் ஆலைகள் நிலத்தடிநீர் எடுப்பதற்கு, நாடு முழுவதும் அனுமதியளிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை 6,881. இந்த இடங்களில் அளவுக்கு அதிகமான தண்ணீர் உறிஞ்சப்பட்டு, நிலத்தடிநீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்ட இடங்கள் மட்டும் 1,186. அங்கு நிலத்தடிநீருக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதில் 462 இடங்கள் தமிழகத்தில் உள்ளவை.

தமிழ்நாட்டில் மொத்தம் 3,299 மினரல் வாட்டர் ஆலைகள் உள்ளன. அதிக தண்ணீர் ஆலைகள் உள்ள மாநிலத்தில் தமிழகத்துக்கே முதல் இடம். 1,882 மினரல் வாட்டர் ஆலைகளுடன் மகாராஷ்டிர மாநிலம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

Post a Comment

0 Comments