நடிகர் கமல் இடம் காவல் துறையினர் விசாரணை! வருத்தம் தெரிவித்த கமல்.


இனி இது போன்று விபத்துகள் நடக்காமல் இருக்க காவல்துறையினர் கூறும் ஆலோசனைகளையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அதை பரிசீலிக்கவும் தயாராக இருக்கிறோம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை அருகே ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.
கடந்த 19-ம் தேதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது படப்பிடிப்பு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த கிரேன் விழுந்து உதவி இயக்குநர் ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


இந்த கோர விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன், லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்ட 4 பேரின் மீது விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்துதல், கவனக் குறைவாக இருந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

விபத்து தொடர்பாக விசாரிக்க இயக்குநர் ஷங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். அவர் கடந்த 27-ம் தேதி விசாரணைக்கு ஆஜரான நிலையில் கமல்ஹாசனுக்கும் காவல்துறையினர் சம்மன் அனுப்பினர்.

இந்நிலையில் இன்று நடிகர் கமல்ஹாசம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “இந்த விபத்து தொடர்பாக நடந்த சம்பவத்தை பற்றிய விவரங்கள் அறிய காவல்துறை என்னை அழைத்திருந்தனர்

நடந்த விபத்தில் அடிபடாமல் தப்பித்தவர்களின் நானும் ஒருவன்.அதனால் நடந்த சம்பவத்தை பற்றிய விவரங்களை கூறுவது எனது கடமை .இழந்த 3 சகோதரர்களுக்கு நான் செய்யும் கடமையாக இதை பார்க்கிறேன். அங்கு நடந்த விவரங்களை நான் காவல்துறையிடம் கூறியுள்ளேன்.

எங்கள் துறையில் இனி இதுபோன்று விபத்துகள் நடைபெறாமல் இருக்க இனி நாங்கள் எடுக்க வேண்டுய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலாகவே இதை நான் பார்க்கிறேன். திரைத்துறை சார்ந்தவர்கள் விரைவில் சந்தித்து பேசவுள்ளோம் அது குறித்த தகவல்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்கிறோம்

இனி இது போன்று விபத்துகள் நடக்காமல் இருக்க காவல்துறையினர் கூறும் ஆலோசனைகளையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அதை பரிசீலிக்கவும் தயாராக இருக்கிறோம்என்று கூறினார்.

Post a Comment

0 Comments