ராஜிவ் நினைவிடத்தில் டிக் டாக்: மன்னிப்பு கேட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி.


விளையாட்டுத்தனமாகச் செய்துவிட்டேன்.. அதை உடனே டெலிட்டும் செய்துவிட்டேன்.. என ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ஆவேசமாக டிக்டாக் வெளியிட்ட நாம் தமிழர் நிர்வாகி மன்னிப்பு கேட்டுள்ளார்.

கடந்த ஆண்டு விக்ரவாண்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ் காந்தியை கொன்றது நாங்கள் தான். இலங்கை தமிழர்களுக்கு எதிராக இந்திய ராணுவத்தை அனுப்பியதற்காக பழிவாங்கினோம் என்று தெரிவித்தார்

அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி நிர்வாகி துரைமுருகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவதூறாக டிக்டாக் செய்தார்.

பிரபாகரனின் பிள்ளைகள்:

"பிரபாகரனின் பிள்ளைகள் ன்னு நாங்கதான்டா சொல்லுவோம்.. நாங்கதான் சொல்லுவோம்.. எங்க இனத்திற்கு ஒரு பெருமை இருக்கு.. நீ எப்பேர்பட்ட கொம்பனாவது இரு.. எந்த நாட்டின் அதிபனாவது இரு.. என் இனத்தை தொட்டால் அவர்களுக்குத் தூக்குதான்'" என்று பேசியபடியே பின்புறமுள்ள ராஜீவ் காந்தியின் கல்வெட்டை கை நீட்டி சுட்டி காட்டினார்.

நாம்தமிழர் நிர்வாகி வருத்தம்:

இதனால் கொதித்து போன காங்கிரஸ் நிர்வாகிகள் காஞ்சிபுரம் மற்றும் நெல்லையில் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இதனிடையே இந்தச் சூழலில், டிக்டாக் மூலம் ராஜீவ் காந்தியை அவமரியாதையாகப் பேசியதற்காக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து டிக்டாக்கில் மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது என்நோக்கம் அல்ல 

அதில், ``நான் ஸ்ரீபெரும்புதூர் போனபோது ராஜீவ் காந்தி அவர்களின் நினைவிடத்தில் ஒரு டிக்டாக் வீடியா வெளியிட்டிருந்தேன். அந்த வீடியோ செய்தது தவறு என்று உணர்ந்து நான் சரியாக ஒரு மணி நேரத்திலயே நீக்கிவிட்டேன். ஆனால், அதற்கு முன்பே பலரும் டவுன்லோட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கிறார்கள்

அதைப் பார்த்துவிட்டு ராஜீவ் காந்தியை நேசிப்பவர்கள் என்னை அழைச்சு, `நீங்களே இப்படிப் பண்ணுவீங்கனு எதிர்பார்க்கலை'னு சொன்னாங்க. உண்மையிலேயே ராஜீவ் காந்தி அவர்களையோ, அவர்களுடைய நினைவிடத்தையோ கொச்சைப்படுத்துவதோ அசிங்கப்படுத்துவதோ என்னுடைய நோக்கம் இல்லை வருத்தம் தெரிவித்தார்.

நான் தனிப்பட்ட முறையில் ஒரு விளையாட்டுத்தனமாக வீடியோ வெளியிட்டு விட்டேன். அதனால்தான் அதை உடனே நீக்கியும் விட்டேன். அந்த வீடியோவால் யாருடைய மனம் புண்பட்டிருந்தாலோ காயப்பட்டிருந்தாலோ நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இனிமேல் இதுபோன்ற செயல்கள் நடக்காது" என்று தனது வீடியோவில் துரைமுருகன் கூறியுள்ளார்


Post a Comment

0 Comments