டெல்லி பள்ளிகளில் காலையில் பிராத்தனை! கொரோன வைரஸ் எதிரொலி:

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலை பிரார்த்தனைக்கூட்டத்தை நடத்த வேண்டாமென டெல்லி அரசு நகரில் உள்ள பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

உலகம் முழுவதும் 95,000க்கும் அதிகமான நபர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கரோனாவில் பலி எண்ணிக்கை 3,042 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 3,291 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி இத்தாலி, ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இத்தாலியைச் சேர்ந்த 13 பேருக்கும் கரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டுள்ளதால் இவர்கள் அமிர்தசரஸிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். நிறைய பேருக்கு கரோனா வைரஸ் பரவ இவர்கள் காரணமாக இருந்திருக்கக் கூடும் என்று மருத்துவ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்தியாவில் இதுவரை 31 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் மூவர் டெல்லியைச் சேர்ந்தவர்கள். டெல்லி மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த இருவருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது. டெல்லியைச் சேர்ந்தவர் சமீபத்தில் இத்தாலி சென்று திரும்பியுள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்தவர் துபாய் சென்று திரும்பியுள்ளார்.


கரோனா வைரஸ் தாக்கம் டெல்லி நகரில் பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக டெல்லியில் உள்ள 5 ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகள் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. ஆனால் இடைநிலை வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் பள்ளிக்கு வரும்படி ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது, மேலதிக உத்தரவு வரும் வரை ஊழியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப் பதிவையும் நிறுத்தி வைக்குமாறு கல்வி இயக்குநரகம் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் அதிபர்களுக்கு இதுகுறித்து டெல்லி கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை உத்தரவில், ''டெல்லியில் உள்ள பள்ளிகளில் காலை வேளையில் நடத்தப்படும் பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்த வேண்டாம் என அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தரவிடப்படுகிறது. மேலும், உத்தரவு வரும் வரை ஊழியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகையை பதிவு செய்தை நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments