'தளபதி 65' படத்தின் இயக்குநர் யார்? -குழப்பத்தில் ரசிகர்கள்


'தளபதி 65' படத்தின் இயக்குநர் யார் என்பதில் திடீர் குழப்பம் உருவாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இது விஜய் நடிப்பில் உருவாகும் 64-வது படமாகும். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். 

ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.


'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 65-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தை இயக்க இயக்குநர் பாண்டிராஜ், 'கோமாளி' படத்தின் இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதன், இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கதைகள் கூறினார்கள். ஆனால், இதில் சுதா கொங்கரா கூறிய கதை விஜய்க்கு ரொம்பவே பிடித்திருந்தது.

முதலில் சுதா கொங்காரா கூறியது கதையின் அவுட்-லைன் தான் என்றும், முழுக்கதையையும் 20 நாட்களில் தயார் செய்து கூறுவதாக விஜய்யிடம் கூறியிருக்கிறார். அடுத்ததாக 20 நாட்களில் கழித்து, விஜய்யைச் சந்தித்து முழுக்கதையையும் கூறியுள்ளார் சுதா கொங்காரா. அந்தக் கதை விஜய்க்கு முழுமையான திருப்தி அளிக்கவில்லை என்கிறார்கள்.

ஆனாலும், இந்தக் கதையை இன்னும் மெருக்கேற்றி ஜூலை மாதத்தில் படப்பிடிப்புக்குச் செல்லலாம் என்று தெரிவித்திருக்கிறார் விஜய். இதற்கு சுதா கொங்காராவோ படத்துக்கு முழுமையாக தயாரிப்புப் பணிகள் முடித்து என்னால் நவம்பரில் தான் படப்பிடிப்புக்குச் செல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளார். இந்த முடிவினால் விஜய் - சுதா கொங்காரா கூட்டணி உருவாவதில் குழப்பம் நீடிக்கிறது.

முழுமையான பணிகளை முடித்துவிட்டு, 'தளபதி 66' படத்தில் தான் இந்தக் கூட்டணி உருவாகும் என்கிறார்கள். இது தொடர்பான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெறவுள்ளது. ஆகையால், தற்போது 'தளபதி 65' படத்தின் இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.Post a Comment

0 Comments