யெஸ் வாங்கி நிறுவனர் கைது! மார்ச் 11 வரை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட  யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 11-ம் தேதி வரை ராணா கபூரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்துள்ளது. 

டிஎச்எப்எல் நிறுவனம் பல்வேறு வங்கிகளில் 13ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றுப் போலியான 79 நிறுவனங்களுக்கு அந்தப் பணத்தைக் கடன் கொடுத்ததாகக் கூறி மோசடி செய்துள்ளது.

டிஎச்எப்எல் நிறுவனத்தின் இந்த மோசடியில் நாலாயிரத்து 450 கோடி ரூபாய் ராணா கபூரின் எஸ் பேங்கில் பெற்றதாகும். இந்தக் கடன் திரும்பச் செலுத்தப்படாமல் வாராக்கடனாக உள்ளது என தகவல் வெளியானது. இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலையில் மும்பை ஒர்லியில் உள்ள ராணா கபூரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டனர். 


ராணாகபூரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர்.

அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு அவரைக் கைது செய்தனர். செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்த பின் அவரை விடுமுறைக்காலச் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

விசாரணைக்குச் சரியாக ஒத்துழைக்கவில்லை எனத் தெரிவித்ததுடன், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். இதையடுத்து வரும் 11ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments